சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சிறைவாசிகளின் விடுதலைக்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் அவர்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

அரசின் பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்ததுடன் தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுத்து 49 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.