நெல் அறுவடை இயந்திரம் வாங்கியதில் மகன் ஏமாற்றம். பெற்றோர் விஷம் குடித்து பலி

2 Min Read
செல்லம்மாள் ரங்கன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் வாங்கிய பிரச்சனையில் மகன் ஏமாற்றப்பட்டதால் விரக்தி அடைந்த பெற்றோர் விஷமருந்து குடித்து உயிரிழந்தனர்.

- Advertisement -
Ad imageAd image


சின்னசேலம் அருகே மேலூர் காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மகன் கோவிந்தராஜ்(38). இவரும் இவருடைய நண்பர் ஈரியூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பன் மகன் செல்வம்(35) என்பவரும் நண்பர்கள் என்பதால் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2020ம் ஆண்டு நெல் அறுவடை இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.


இந்தநிலையில் செல்வம் வெளிநாடு போக வேண்டியதால் நெல் அறுவடை இயந்திரத்தை விற்க முடிவு செய்தனர். அப்போது இருவரிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி செல்வம் மாமனார் திருமூர்த்தி வைத்துக்கொள்வதாக பேசி, 6 மாதம் அவகாசம் கொடுத்து, ரூ8,50,000 பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. மேலும் ரூ50,000 பணத்தை அப்போதே கோவிந்தராஜ் என்பவருக்கு செல்வம் தரப்பினர் முன்பணமாக கொடுத்தனர்.


மேலும் செல்வம் வெளிநாடு சென்ற நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து விட்டதால் கோவிந்தராஜ் என்பவர் செல்வம் மாமனாரிடம் மீதிபணம் கேட்டுள்ளார். அப்போது திருமூர்த்தி என்னிடம் பணம் இல்லை. வண்டியை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு போ என்று கூறியதாக தெரிகிறது.

நெல் அறுவடை செய்யும் இயந்திரம்

அதனால் கோவிந்தராஜ் வண்டியை எடுத்து சென்று விட்டார்.
இந்தநிலையில் சிங்கப்பூர் சென்ற செல்வம் கடந்த 25ந்தேதி சொந்த ஊருக்கு  வந்துள்ளார். அப்போது அவருடைய மாமனார் நடந்த சம்பவம் பற்றி மருமகனிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் நண்பர் கோவிந்தராஜிடம் பணத்தை கொடுக்காமல் வண்டியை எப்படி எடுத்து சென்றாய் என கேட்டுள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. அப்போது செல்வம் தரப்பினர் தற்போதைய விலைப்படி ரூ5லட்சம் குறைத்து விலை பேசியதாக தெரிகிறது.

இதை கோவிந்தராஜ் தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிகிறது. மேலும் கோவிந்தராஜ் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்து பேச்சுவார்த்தை முடிவை ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால் செல்வம் நேற்று முன் தினம் மாலை சின்னசேலம் காவல் நிலையத்தில் நெல் அறுவடை இயந்திரத்தை பணம் தராமல் எடுத்து சென்றதாக கோவிந்தராஜ்மீது புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இராஜாராமன் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியும் உடன்பாடு எட்டாததால், இருதரப்பினரையும் நேற்று காலை வரச்சொன்னதாக தெரிகிறது.


இதுசம்பந்தமாக கோவிந்தராஜ் தனது தந்தையிடம் நாம் ஏமாற்றப்பட்டோம் என்று கூறி அழுதுள்ளார். இதனால் மனம் விரக்தி அடைந்த கோவிந்தராஜின் பெற்றோர் ரங்கன்(80), செல்லம்மாள்(70) ஆகியோர் களைக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். சின்னசேலம் காவல் நிலையம் சென்று திரும்பி வந்த மகன் கோவிந்தராஜ் பெற்றோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு இருவரையும் தூக்கி சென்றனர். ஆனால் இங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.

இதுகுறித்து கோவிந்தராஜ் புகாரின்பேரில் சின்னசேலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் வாங்கிய பிரச்சனையில் மகன் ஏமாற்றப்பட்டதால் விரக்தி அடைந்த பெற்றோர் விஷமருந்து குடித்து பலியான சம்பவம் பெரும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Share This Article

Leave a Reply