நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதேசமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், தனியார் ஆங்கில இதழ்களில் வெளியான கட்டுரைகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;- “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி.
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? மேலும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

அப்போது சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
மேலும் கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளி தந்து விட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல, ஏழைகளுக்கான அரசு என கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.