இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் சுதந்திரமாக செயல்பட்டதா அல்லது பாஜக சொல்லி அறிவிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தமிழகத்தில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.

மேலும், காங்கிரஸ் தரப்பில், தமிழகத்தில் உள்ள எல்லாத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வதற்கான முன்னேற்பாடு வேலைகள், மும்பையில் தீவிரமாக செய்யப்பட உள்ளது.
மேலும் 40 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக – காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், “தேர்தல் பத்திரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தான் கோரிக்கை விடுத்தது.

இதற்காக 500-க்கும் மேற்பட்ட பாரத ஸ்டேட் வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எங்களிடம் கனம் இல்லாததால் பயம் இல்லை. யார் பயந்தார்கள், யார் அச்சப்பட்டார்கள் என்பது வெளிவர தொடங்கி உள்ளது.
மேலும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ மற்றும் வருமான வரி சோதனைகளுக்கு பின்பு நிதிகள் பெறுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து நிதிகள் வந்திருப்பதாகவும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தேர்தல் நிதிகள் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது குறித்து பதில் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் முதற்கட்டமாகத் தேர்தல் நடக்கப்போவது எப்படி மோடிக்கு தெரியும். குறுகிய காலத்தில் 5 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.
தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் சுதந்திரமாக செயல்பட்டதா அல்லது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சொல்லி அறிவிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த சந்தேகத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் தான் தீர்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.