புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை சபரிமலை கோவிலில் நடை யை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்தார். சபரிமலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் “வெர்ச்சுவல் க்யூ” வழி மட்டும் 78,402 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பிறந்ததையொட்டி நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சன்னிதானத்தில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் (31 ஆம் தேதி) அதிகாலை 3 மணி முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நேற்று புத்தாண்டு என்பதாலும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் நேற்று காலையும் தரிசனம் செய்த பின்னரே திரும்பினர். புத்தாண்டில் ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் காத்துக் கிடந்தனர். நெய் அபிஷேகம் செய்வதற்கும் பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு காலத்தில் தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வருகின்றனர். வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் ஒரு எஸ்.பி தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாக்ஸ் 18,018 நெய், தேங்காய் அபிஷேகம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்யாமல் திரும்புவதில்லை. மண்டல, மகர விளக்கு காலங்களில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் நெய் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 4 பக்தர்கள் புத்தாண்டு தினமான நேற்று சபரிமலையில் 18,018 நெய், தேங்காய் அபிஷேகம் செய்தனர். பம்பையில் இருந்து இவை டிராக்டர் மூலம் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் சன்னிதானத்தில் வைத்து 18,018 தேங்காய்களை உடைத்து சபரிமலை ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தந்திரி மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நெய் அபிஷேகம் நடத்தினார். கேரளா மாநிலம் சபரிமலை கோயிலில் புத்தாண்டு முன்னிட்டு 95,000 பேர் நேற்று ஒரே நாளில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.