தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களை விடுவிக்க சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அண்மையில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒற்றைக்காரணத்திற்காக, தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொடும் குற்றவாளிகள் போலத் தேடித் தேடி கைது செய்துவருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட காணொலி ஊடகங்களில் வெளியாகி தென் மாவட்ட மக்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் மக்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டதை பெருங்குற்றம் போலக் கட்டமைத்து கைது செய்வதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகவே, தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.