தமிழ்நாட்டு அமைச்சரவையின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் டி.ஆர்.பி. ராஜா. தற்போதைய அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 35 ஆக நீடிக்கிறது.
அமைச்சரவையில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக அமைச்சரவையில் இணையும் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.