வருவாய்த்துறையினரின் பணியிறக்கப் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளில் முதன்மையானதான துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படாமல் பாதுகாப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், 10 கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் நிறைவேற்றுவது நியாயமல்ல. ஒற்றை கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும், தங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
இளநிலை/முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையை வெளியிட வேண்டும், பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மீதமுள்ள 9 கோரிக்கைகளில் குறைந்தது ஐந்து கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் மூலம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.