சாத்தான்குளம் அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தண்ணீரில் குளித்து வீடியோ வெளியிட்ட யூ டியூபர் மற்றும் அவரது நண்பரை பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காணலாம்.
தூத்துக்குடி மாவட்டம், அடுத்த சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் ரஞ்சித் பாலா என்ற பாலகிருஷ்ணன் வயது (23). இவர் யூ டியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வீடியோ பதிவிட்டு லைக்குகளையும், சேர்களையும் குவித்து வருகிறார்.

அப்போது இவர் சாத்தான்குளம் அடுத்த வைரவம்தருவை குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அதற்குள் ரஞ்சித் பாலா டைவ் அடித்து குளிப்பது போன்ற வீடியோவையும் பதிவிட்டு உள்ளார். இந்த ரீல்ஸ் எடுப்பதற்காக நண்பர்களுடன் சென்று ஒரு கட்டிடத்தின் மீது ஏறி குளத்திற்குள் டைவ் அடிக்கிறார்.

அப்போது அருகில் நிற்கும் நண்பர்கள், குளத்து நீரில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அதில் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை பதற செய்தது. இந்த சம்பவம் பார்ப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட யூ டியூபர் ரஞ்சித் பாலா என்ற பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான முருகன் மகன் சிவகுமார் வயது (19) ஆகிய 2 பேரை சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏசு ராஜசேகரன் கைது செய்தார்.

இவர்கள் மீது பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தலைமறைவாக உள்ள வீரபுத்திரன் மகன் இசக்கிராஜா வயது (19) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.