பிரதமர் மோடி குறித்து அவதூறு: மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் அதிரடி நீக்கம்..!

3 Min Read

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த 3 அமைச்சர்களை நீக்கி மாலத்தீவு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்ற போது, அவர் தங்கியிருந்த பங்காரம் தீவு விடுதியின் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டது. ஆழ்கடல் நீச்சல் பயிற்சி, ஸ்நோர்க்கலிங் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

பிரதமர் மோடியின் இந்த பதிவு குறித்து மாலத்தீவின் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் மரியம் ஷியூனா, மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத் தீவை சுற்றுலா பிரதேசமாக மாற்ற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. அவரை கோமாளி, பொம்மை என்றும் விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதிவு நீக்கப்பட்டது.

மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர்

இதனால் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வந்த போதிலும் மரியம் ஷியுனா பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதை நிறுத்தவில்லை. இவர் தவிர ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகிய அமைச்சர்களும் எம்.பி ஷாகித் ரமீஸ் மல்ஷாவும் மாலத்தீவு அரசு அதிகாரிகளும் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்திருந்தனர். இதனிடையே, மாலத்தீவு அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு தலைவர்களை பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இழிவான கருத்துக்கள் குறித்து அரசு அறிந்துள்ளது.

அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்கள். அவை மாலத்தீவு அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயக ரீதியிலும், சர்வதேச நட்பு நாடுகளுடனான உறவுகளையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மோடிக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாலத்தீவு அரசு தயங்காது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், பிரதமர் மோடி குறித்த மரியம் ஷியுனாவின் தரக்குறைவான கருத்துகளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மாலத்தீவுக்கான இந்திய தூதர் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து, பிரதமர் மோடிக்கு எதிராக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறித்து புகார் தெரிவித்தார். இந்த நிலையில், மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோரை தற்காலிக பதவி நீக்கம் செய்து மாலத்தீவு அதிபர் முய்சு நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

பிரதமர் மோடி

அண்டை நாடான இந்தியா பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதற்காக அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள்,’’ என்று கூறப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபராக சீன ஆதரவாளரான முகமது முய்சு மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை விலக்கி கொள்ள கேட்டு கொண்டார். அதிபர் முய்சு அடுத்த வாரம் சீனா செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் கேலி பதிவு நெட்டிசன்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாலத்தீவினை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் விளைவாக, மாலத்தீவு செல்ல இருந்த விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓட்டல் புக்கிங்குகளை பலர் ரத்து செய்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக, லட்சத்தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அக்ஷய்குமார், சல்மான் கான், டைகர் ஷெராப், ஜான் ஆபிரகாம், ரந்தீப் ஹூடா, ஷ்ரத்தா கபூர், கங்கனா ரனாவத், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வெங்கடேஷ் பிரசாத், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

Share This Article

Leave a Reply