பதிண்டா ராணுவ முகாமில் இறந்த சேலம் ராணுவ வீரருக்கு , ராணுவ வாகனத்தில் இறுதி ஊர்வலம் நடத்தவேண்டும் என்றும் அவருக்கு குண்டு முழத்துடன் கூடிய ராணுவ மரியாதை செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர் .
இதனால் 4 மணி நேரத்திற்கு பிறகு ராணுவ வாகனத்தில் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று அவரது உடல் அடக்கம் செய்ய பட்டது .
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் 13ம் தேதி காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று பிரேத பரிசோதனை செய்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சேலத்தை சேர்ந்த கமலேஷ் உடல் பஞ்சாபில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவ வீரருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருந்து ராணுவ ஆம்புலன்ஸில் சொந்த ஊரான மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்திற்கு 1 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
இதனிடையே, அரசு மரியாதை வழங்கப்படும் என நினைத்து வீட்டில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆனால், அரசு மரியாதை வழங்கப்படாது தெரிந்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர். உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ்க்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பாக மேச்சேரி – வனவாசி பிரதான சாலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ராணுவ வாகனத்தில் உடலை எடுத்து செல்ல வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே காவல்துறையிடம் கிராம இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், கிராம மக்கள் கோரிக்கை ஏற்று ஈரோட்டில் இருந்து ராணுவ வாகனத்தை கொண்டு வந்தனர். மாலை 4.20 மணிக்கு வனவாசி பகுதியில் இருந்து பனகாட்டில் உள்ள வீட்டிற்கு உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது, பொதுமக்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். வீட்டில் உடலை வைத்த பிறகு, ராணுவ அதிகாரிகள், என்சிசி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது உடலில் போடப்பட்ட தேசிய கொடியை எடுத்து பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது. பின்னர், அருகில் உள்ள மயானத்தில் கமலேஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, “ராணுவத்தில் சண்டை போட்டு உயிரிழந்தால் மட்டுமே அரசு மரியாதை வழங்கப்படும். தற்போது, அவர் உயிரிழப்பு சந்தேகம் மரணம் என ராணுவம் தெரிவித்துள்ளது. சண்டையில் ஏற்படாத மரணம் என்பதால் அரசு மரியாதை வழங்கவில்லை. ஆனால், பணியில் இருக்கும்போது உயிரிழந்து உள்ளதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் ” என்று அவர் தெரிவித்தார் .
Leave a Reply
You must be logged in to post a comment.