- காதுகேளாத, வாய் பேச முடியாத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவிப்பொறியாளராக 2014ம் ஆண்டு பணியில் சேர்ந்த காதுகேளாத, வாய் பேச முடியாத வித்யாசாகர், தமிழ் மொழித் தேர்வு சான்றை நவம்பருக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் கூறி, கடிதம் அனுப்பப்பட்டது.
ஆங்கில வழியில் படித்து பட்டம் பெற்ற நிலையில், தமிழ்மொழி எழுத்துத் தேர்வில் பங்கேற்றதாகவும், நேர்முகத் தேர்வில் பங்கெடுக்க முடியாததால் சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடக் கோரி வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தமிழ் மொழித் தேர்வு தேர்ச்சி சான்று சமர்ப்பிக்காததால், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கல்வி, வேலை வாய்ப்பு முதல், பொது சேவைகள், சுகாதாரம் வரை மாற்றுத் திறனாளிகளால் முழு பங்களிப்பை வழங்க முடியவில்லை. அவர்கள் சமூக, கலாச்சார, சட்ட, சுற்றுச்சூழல் ரீதியாக எதிர்கொள்ளும் தடைகளை புரிந்து கொண்டு, அவற்றை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சாதாரண நபர்களுக்கு விதிக்கும் நிபந்தனைகளை, மாற்றுத் திறனாளிகளுக்கும் விதித்து தேவையில்லாத பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, வாய்பேச முடியாத மனுதாரரால் எப்படி தமிழ்மொழி தேர்வின் நேர்முக தேர்வை எதிர்கொள்ள முடியும் எனக் கூறி, இந்த தேர்வில் இருந்து அவருக்கு விலக்களிக்கும்படி, வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-public-engaged-in-a-sapling-protest-demanding-the-repair-of-the-potholed-road/#google_vignette
மேலும், தமிழ் மொழித்தேர்வு தேர்ச்சி சான்று சமர்ப்பிக்கவில்லை என கூறி அவருக்கு வழங்கப்படாத ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.