சாமி கும்பிட சென்ற பட்டியிலான மக்கள் மீது , வன்னியர் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சாதி கலவரம் ஏற்படும் சூழல் எப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சாமி கும்பிட கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள் மீது வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் காயம்:- தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி பட்டியலின மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாகச் சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் சென்று சாமி கும்பிடக் கூடாது எனக் கூறி அதே கிராமத்தில் வசித்து வரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக அனுமதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரெளபதி அம்மன் கோயிலில் நேற்று (7ஆம் தேதி) இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சாமி கும்பிட திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த கந்தன், அவரது மனைவி கற்பகம், மகன் கதிரவன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்ததும் பட்டியலின மக்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சாமி கும்பிட கோயிலுக்கு நுழைந்த பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பட்டியலினத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று (7ஆம் தேதி) இரவு மேல்பாதி கிராமத்தில் சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மேல்பாதி பட்டியலின மக்கள் .

இது குறித்துத் தகவலறிந்ததும் காவல்துறையும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பட்டியலின மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாகச் சென்னை – கும்பகோணம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் காரணமாகத் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மேல்பாதி கிராமத்திலும், சர்ச்சைக்குரிய திரெளபதி அம்மன் கோயிலிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.