சிதம்பரம் தீட்சிதர்கள் மத்தியில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சரண்யா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது; குழந்தை திருமணத்தை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. இதற்காக 1929 ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் 1978 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது. நீண்ட காலமாக இருந்த இந்த வயது தகுதியை கடந்து 2021 ஆம் ஆண்டு 21 ஆக உயர்ந்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற நிலை குழுவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டங்களை பொருத்தாமல் சிதம்பரத்தில் உள்ள பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். எனவே இந்த குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகிய கொண்ட நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன் முஹம்மது சபிக் ஆகியோர் கொண்ட முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சி. கனகராஜ் ஆஜராகி சிதம்பரம் கோவில் பணிக்கு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் மத்தியில் எழுதப்படாத சட்டம் உள்ளது.

இதனால் குழந்தை திருமணம் நடத்தி வைக்கின்றனர். தடை சட்டத்துக்கு எதிரானது என்று வாதிட்டார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு கோவில்கள் விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு டிவிசன் பெஞ்சுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். போலீஸ் தரப்பில் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் குறித்து ஏற்கனவே பெறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்று கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் புது தீட்சர்தர்களை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.