இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை பள்ளி மாணவி மீது மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் துடியலூர் அசோகபுரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவியை ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ , அப்ப உனக்கு திமிர் அதிகமாகத் தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை துடியலூர் என் ஜி ஓ காலனி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இஸ்லாமிய மாணவியை அபிநயா மற்றும் ராஜ்குமார் ஆகிய ஆசிரியர்கள் மதரீதியான பாகுபாட்டோடு நடத்தியதாகத் தகவல்கள் தெரிகின்றன. அந்த மாணவியை மாட்டுக்கறி உண்பவர் என்று கேவலமான முறையில் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் சித்தரித்ததாகவும் பல இழிவான சொற்களைக் கொண்டு திட்டியதாகவும் அந்த மாணவி அணிந்திருந்த துணியைக் கொண்டு பிற மாணவர்களின் காலனியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவையில் செருப்பை துடைக்கச் சொல்லி முஸ்லிம் மாணவி அவமதிப்பு தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் உதவி ஆணையாளர் தலையிட்டு ஆசிரியர்களைக் கண்டித்துப் பெற்றோர்களைச் சமாதானம் செய்து மாணவியை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவிகளுக்குத் தொடர்ந்து அந்த ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்து வந்ததாகப் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் உரிய விசாரணை நடத்திக் குற்றச்சாட்டு உண்மையெனில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கல்விக் கூடங்கள் சமூக நல்லிணக்கத்தைப் போதிக்கக்கூடிய இடங்களாக இருக்க வேண்டுமே ஒழிய மதவெறியை ஊக்குவிக்கும் தளமாக மாறக்கூடாது. தமிழ்நாடு அரசு இது விடயத்தில் தனிக் கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாதி மத ரீதியான பாகுபாடுகளுக்கு இடம் அளிக்காத வண்ணம் ஆசிரியர்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.