பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெட்டி கேஸ் எனப்படும் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் தாக்கினார் என்ற புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக விசாரணை நடத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பல்வீர் சிங் மீது தற்போது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்தரவதை செய்தல் ஆகிய குற்றங்களுக்கான ஐ.பி.சி 326 பிரிவின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வீர் சிங் தொடர்பாக பிரச்னை சட்டப்பேரவையில் எழுந்த போது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.