அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் ஆஃப்கானிஸ்தானின் அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இதில் அஸ்மத்துல்லா உமர்சாய் சிறப்பாக ஆடிய 107 பந்துகளில் 97 ரன்களை குவித்து ஆவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களைக் கூட எட்டவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ், லுங்கி இங்கிடி தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டிலே பெலுக்வாயோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி. ஓப்பனர்களாக குயின்டன் டி காக் – டெம்பா பவுமா களமிறங்கினர். 10 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துகொண்ட இந்த இணையை முஜீபுர் ரஹ்மான் பிரித்து வெளியேற்றினார். டெம்பா 23 ரன்களில் நடையைக் கட்டினார். மறுபுறம் 3 சிக்ஸர்களை விளாசி 41 ரன்களை சேர்த்த குயின்டன் டி காக-கை முகமது நபி அவுட்டாக்க ஏய்டன் மார்க்ராம் களத்துக்கு வந்தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரஷித் கான் வீசிய 24ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி 25 ரன்களில் கிளம்பினார். ரஸ்ஸி வான் டெர் டுசென் ஒருபுறம் அரை சதம் கடந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹென்ரிச் கிளாசென் 10 ரன்களிலும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த ஆண்டிலே பெஹ்லுக்வாயோ பொறுப்பாக ஆடி 48ஆவது ஓவரில் 6,4,6 அடித்து இலக்கை எட்டச் செய்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி வெற்றி பெற்றது. ரஸ்ஸி வான் டெர் டுசென் 76 ரன்களுடனும், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 39 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷீத்கான், நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முஜீபூர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தத் தோல்வியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது ஆஃப்கானிஸ்தான். இருப்பினும், இந்தத் தொடரில் அந்த அணியின் போராட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.