மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக , விவசாய தம்பதி ஒருவர் , எந்திரம் தயாரித்து தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அவர்கள் கடைசியாக எழுதி விட்டு சென்ற கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் , வின்சியா கிராமத்தை சேர்ந்தவர் ஹேமு மேகவானா (38 ) விவசாயி . இவருக்கு ஹன்சா மேகவானா (35 ) என்ற மனைவி மற்றும் 13 வயதான ஒரு மகன் மற்றும் , 12 வயதான மகள் உள்ளனர் .
ஹன்சா விற்கு சமீபகாலமாக உடல்நல குறைவு ஏற்பட்டதால் , ஹேமு மற்றும் ஹன்சா தம்பதியினர் மாந்திரிகம் மற்றும் மூட நம்பிக்கை வழிபாடுகளில் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளனர் .

மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் , கோவில் ஒன்றை கட்டி அதில் யாகம் மற்றும் மாந்த்ரீக பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளார் .
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோமகுண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த தம்பதி, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை ஆய்வு செய்த போது தான் பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர்.
சம்பவ நாள் அன்று ஹோமம் வளர்த்து அந்த எந்திரத்தில் தலையை கொடுத்து தாங்களே அதை இயக்கி தலை துண்டாக்கிக் கொண்டு நரபலியாகியுள்ளனர். தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக இவர்கள் அதை அமைத்துள்ளனர்.
இவை அனைத்தையும் முன்கூட்டிய திட்டம் வகுத்திருந்த தம்பதிகள் , சனிக்கிழமையே தங்களது இரு குழந்தைகளையும் தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டனர் .
சம்பவம் அறிந்து அங்கு வந்த வின்சியா போலீசார் , தம்பிதிகள் விட்டு சென்ற கடிதம் மற்றும் , அவர்களது கைப்பேசிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.