பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வாழ்க்கை விசாரித்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.
இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே வலியுறுத்தினார்.
மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?
செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனுமதிக்காது. ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை திமுக மற்றும் அதன் உணர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.