இந்தியாவை வல்லரசாக மாற்ற ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் அவசியம் : பியூஷ் கோயல்

2 Min Read

இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

சென்னையில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும், முன்னேற்றம் அடைந்து, 2047-ம் ஆண்டு வாக்கில் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றவேண்டும் என்ற இந்தியாவின் பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப்புலவரும், தத்துவ ஞானியுமான திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய பியூஷ் கோயல், வள்ளுவரின் வழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பின்பற்றி வருவதாகக் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், எந்தவித முன்னேற்றத்தையும் காணாத ஏழை, எளிய, நலிவடைந்த மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்காகத் திருவள்ளுவர் வழியில் பிரதமர் பாடுபட்டு வருகிறார் என்று அவர் கூறினார்.

பியூஷ் கோயல்

கடந்த பத்து ஆண்டுகளாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் வாழ்க்கை மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புகொள்ளும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை பல்வேறு மாநிலங்களின் மக்கள் மற்ற மாநிலங்களின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி பரஸ்பரம் புரிந்துகொள்ள மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும் என்று அவர் கூறினார்.

தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறிய அமைச்சர், இந்த யாத்திரை முகாம்களில் மக்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயன்களைப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட பியூஷ் கோயல், பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், 3.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாகவும், ஜன் தன் வங்கித் திட்டத்தின் கீழ், 1.5 கோடி பேர் வங்கி நடைமுறையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ், 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 51 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும், உஜ்வாலா திட்டத்தின் கீழ், 40 லட்சம் பேர் பயனடைந்து இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிரதமரின் வீட்டுவசதித்திட்டம் , முத்ரா கடன் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், மக்கள் மருந்தக மையங்கள் உள்ளிட்ட 17 திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைக்குப் பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார் என்று கூறிய அவர், தகுதியான மக்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களில் இணைந்து அவற்றின் பயன்களை வீட்டு வாசலிலேயே பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இலவச இணைப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் பியூஷ்கோயல் முத்ரா திட்டம் மற்றும் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி ஸ்ரீதரன், சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகக் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article

Leave a Reply