பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணி: அரசின் செயலுக்கு தினகரன் கண்டனம்

2 Min Read

பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசின் செயலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு பிறப்பித்திருத்திருக்கும் உத்தரவு கடும் கண்டனத்திற்குரியது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தால் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் உள்ளடக்கிய பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் முக்கியமான நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

பல்வேறு விதமான போராட்டங்கள் மூலமாக தங்களின் எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்துவரும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதும், பொதுமக்கள் ஒன்று கூடி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானத்தை புறக்கணிப்பதும் அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பரந்தூர்

மேலும், விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கூட வெளியாகாத நிலையில், அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்துவது ஏன் ? என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, தமிழக அரசு தனது விடாப்பிடி தனத்தை கைவிட்டு, விளைநிலங்கள், ஏரி, குளங்கள், குடியிருப்புகளை அழித்து விமான நிலையம் தேவையில்லை என்ற முழக்கத்தை முன்னிறுத்தி ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னையை காது கொடுத்து கேட்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் “என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply