கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி சுருண்டு விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும், முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி, மலர்விழி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மண்ணாங்கட்டி, விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.