கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரஞ்சித் வயது (19). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு கஞ்சமநாதன் பேட்டையில் உள்ள வேலவிநாயகர் கோயில் திருவிழாவுக்கு சென்றார்.

இந்த நிலையில் சுவாமி கும்பிட்டு விட்டு, நள்ளிரவு 11.30 மணி அளவில் அங்கிருந்த கடையில் விளையாட்டு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியதை அடுத்து, இவர் நண்பர்களுடன் விசில் ஊதிக்கொண்டு சென்றனர். அப்போது, கஞ்சமநாதன் பேட்டையை சேர்ந்த ராஜதுரை என்பவர், ரஞ்சித் தரப்பினர்களிடம் இது குறித்து ஏன் இப்படி விசில் ஊதிக்கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்.
இதனால் ரஞ்சித் தரப்பினருக்கும், ராஜதுரை தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பினரும் கழி, கட்டையால் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்கி கொண்டனர். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து ரஞ்சித் தரப்பினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ராஜதுரை தரப்பினர் மீண்டும் அவர்களை வழிமறித்தினர்.
அப்போது எங்கள் ஊர் கோயிலில் உங்களுக்கு என்னடா வேலை என்று கேட்டு, அசிங்கமாக திட்டி ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. பதிலுக்கு இவர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரஞ்சித் மற்றும் இவரது நண்பர்கள் ரகுவரன் வயது (24), 17 வயது சிறுவன், ராஜி வயது (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். எதிர்தரப்பில் கார்த்திகேயன், பிரகாஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

இது குறித்து ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் கஞ்சமநாதன் பேட்டையை சேர்ந்த ராஜதுரை, இவரது சகோதரர் கார்த்திகேயன் மற்றும் பிரகாஷ், மோகன்ராஜ், செல்வகுமார் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ், செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோல் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், விருப்பாச்சியை சேர்ந்த ரஞ்சித், ரகுவரன், சிந்தனை செல்வன், குமார், ராஜி, சுரேந்தர், சதீஷ், விக்னேஷ், வடிவேல் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் ரஞ்சித் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
- மேலும் கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், நெய்வேலி டி.எஸ்.பி சபியுல்லா, மகளிர் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, இன்ஸ்பெக்டர் குறிஞ்சிப்பாடி வீரசேகரன், வடலூர்ராஜா ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விருப்பாச்சி மற்றும் கஞ்சமநாதன் பேட்டை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.