ஜம்மு காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சஞ்சய் கோடாவத் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜாவித் அகமது ஹஜாம், ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லாவை பூர்வீகமாக கொண்டவர்.

இவர் காஷ்மீரில் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அவரது வாட்ஸ்அப் செயலி குரூப்பில் விமர்சனம் செய்திருந்தார். இது மிகப்பெரிய பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஜாவித் அமகது ஹஜாம் மீது மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜாவித் அகமது ஹஜாம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் பயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று, இந்திய நாட்டை சார்ந்த குடிமகன் வாழ்த்து தெரிவித்தால் அதில் எந்த தவறும் கிடையாது. அது ஒரு நல்லெண்ணத்தின் அடையாளம்.

அதில் மனுதாரர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதை மட்டும் வைத்து கொண்டு அவரது நோக்கங்களை நாட்டுக்கு எதிராக சித்தரிக்கக்கூடாது. குறிப்பாக 370 ஆவது சட்டப்பிரிவு மட்டுமில்லாமல், அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு. அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றங்களின் நேரத்தை வீணடித்த மகாராஷ்டிரா காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனத்தை தெரிவிக்கிறது’’ என்று கூறிய நீதிபதிகள், மனு தாரர் மீது மகாராஷ்டிரா காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.