கோவை புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது. இன்று காலையும் பல்வேறு தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. பண்டிகையை முன்னிட்டு டிச.,1ம் தேதி முதலே வீடுகளில், ஸ்டார் கட்டி, கிறிஸ்துமஸ் மரம், குடில் கட்டிபண்டிகையை கொண்டாடுகின்றனர். இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவை புறநகரில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நள்ளிரவு முதல் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் துவங்கின. டவுன்ஹால் பகுதியில் உள்ள, புனித மிக்கேல் அதிதுாதர் தேவாலயத்தில், நேற்று இரவு 11:00 மணிக்குகிறிஸ்துமஸ் இன்னிசை பாடல்களுடன், கிறிஸ்துமஸ் விழா துவங்கியது. சூலூர் பகுதியில் உள்ள சகாய மேரி அன்னை கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். நள்ளிரவு 12:00 மணிக்கு, கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தானிஸ், பொருளாளர் அருண், மறைவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர் முன்னிலையில், கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இன்று காலை, 6:30 மற்றும் 8:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதேபோல், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ., ஆல் சோல்ஸ் சர்ச்சில், நேற்று இரவு 11:30 மணி கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு கூட்டு பிரார்த்தனை பாடல்கள் பாடி ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். பங்குத்தந்தை ஜோசப் சுதாகர் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை நடத்தி அனைவருக்கும் நற்கருணை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க பங்கு குருக்கள் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலயத்தில் இருந்து பவனியாக எடுத்து வந்து புல்குடிலில் வைத்து வணங்கினார். இதேபோல கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா ஆலயத்திலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் தேவாலயம், போத்தனுார் புனித ஜோசப் தேவாலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், கார்மல் நகர் கார்மல் அன்னை தேவாலயம், கோவைப்புதுார் குழந்தை இயேசு தேவாலயம், ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதேபோல், திருச்சி சாலை, சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம், காந்திபுரம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம், சவுரிபாளையம், இம்மானுவேல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் காலை, 4:00 மணி முதல், சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.