கோவை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள புரோஜோன் மால் வர்த்தக வளாகத்தில் கண்ணை கவரும் வகையில் 50 அடி உயரத்திற்கு உலக அதிசயங்களில் ஒன்றான “ஈபிள் டவர்” அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. வீடுகள் தேவாலயங்கள் மற்றும் கடைகளில் வண்ண மின் விளக்குகளால் ஸ்டார்கள் ஜொலிக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரமாண்ட குடில் அமைப்பது, ஸ்டார்கள் மற்றும் அலங்காரங்கள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப் பாடல்கள் என்று கொண்டாட்டங்கள் களை கட்டி இருக்கும். இதேபோல் மாவட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாடப்படும். கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது முதலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் அமைப்பதற்கான பொருட்கள் கடைகளில் குவிந்து வருகின்றன. பல விதமான வண்ணங்கள், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்காக உள்ளன. கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்கான பொருட்களும், அதிகளவில் விற்பனைக்கு உள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவை புரோஜோன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் மரங்களும் அலங்கார தோரணங்களுடன் முகப்பு வாயிலும் அமைக்மப்பட்டுள்ளது. இதேபோல் வாடிக்கையாளர்களை கண்ணை கவரும் வகையில் சுமார் 50 அடி உயரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான புகழ் பெற்ற ஈபிள் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோபுரம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.இதனை தொடர்ந்து வருகிற 31 ஆம் தேதி வரை இந்த டவர் காட்சிப்படுத்தப்பட உள்ளதுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 10 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளதாகவும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும், புரோஜோன் மாலின் இயக்குனர் விஜய் பாடியா மற்றும் விற்பனை பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.