ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பிரச்னைக்குரிய அரசாணை எண் 149ஐ ரத்து செய்வதற்கான வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதே அரசாணையின் படி 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கை எண் 177ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்தி, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.