மதுரை புது நத்தம் சாலையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடி பரப்பளவில் சர்வதேச தரத்தில் 6 தளங்களுடன் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.50 லட்சம் புத்தகங்கள், 18 கோடி மதிப்பீட்டில் பர்னிச்சர், 5 கோடி மதிப்பீட்டில் கணினி தொழில்நுட்ப உபகரணங்கள் என 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நூலக திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடாரும், அதன் தலைவர் ரோஷினி நாடாரும் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர், அன்பில் மகேஷ், எம்.பி. சு.வெங்கடேசன், தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், ஆயுதப்படை மைதானத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்புடன் திறப்புவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,
“திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்களாக நான் சொல்வது கல்வியும் சுகாதாரமும் தான்
அதற்காகவே உயற்சிறப்பு மருத்துவமனையை சென்னையிலும், கலைஞர் பெயரில் நூலகத்தை மதுரையில் திறந்து வைத்துள்ளேன்.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் நூலகமும். இரண்டும் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை. கலைநகர் மதுரை. தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார் கலைஞர். கலைநகரில் நூலகம் அமைத்துள்ளேன் நான். தமிழுக்கு சங்கம் வைத்த மதுரையில் வைக்காமல் நூலகத்தை வேறு எங்கு வைப்பது? திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கம்.
நூலகம் அமைவதற்கு உழைத்த கடைக்கோடி மனிதர்கள் வரை அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மாணவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஷிவ் நாடார், ரோஷினி நாடாரையும் அழைத்து வந்துள்ளேன். அவர் தொழிலதிபர் மட்டுமல்ல. அதிகம் நிவாரண நிதி உதவி செய்பவர். 50 நாடுகளில் 2 லட்சம் பேர் வேலை பார்க்கும் அளவுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தை வளர்த்த இவர் அரசுப் பள்ளியில் படித்தவர். இவரை உங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகம் செய்வதற்கு தான் அழைத்து வரப்பட்டுள்ளார். பெண்கள் அனைத்து பொறுப்பிலும் பணியாற்ற வேண்டும் என்ற பெரியாரின் கனவின் சாட்சி தான் ரோஷினி.
நூலகத்திற்கு அறிவுத்தேடல் உடன் நீங்கள் வரும்போது உங்களை வரவேற்க கலைஞர் சிலையாக அங்கு இருக்கிறார். கலைஞரே ஒரு நூலகம் தான். தனக்கென ஒரு எழுதுகோல் படையே வைத்திருந்தார். கலைஞர் பரம்பரை என ஒரு பரம்பரையே தமிழ்நாட்டில் உண்டு.
மற்ற மொழிகளை விட தமிழ் தனித்தன்மையுடன் விளங்குவதற்கு காரணம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தான்.
நன்றாக படி என கலைஞரை முதன்முதலில் பார்த்த போது அண்ணா சொன்னார். அதையே தான் இப்போது நான் உங்களிடம் சொல்கிறேன். எந்த தடை வந்தாலும் படிப்பை விட்டு விட கூடாது. படிப்பு மட்டுமே யாராலும் திருட முடியாது சொத்து.
ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி. அந்த கல்வியை கொடுத்தது திமுகவின் தாய் கழகமாக நீதிக்கட்சி. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 97 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்வியை கொடுத்து விட்டால் ஒரு மனிதனின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என கல்வியை கொடுத்தது திமுக ஆட்சி. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கல்வியில் இந்தியாவிலே முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்க உள்ளோம். மாபெரும் முன்னோடி திட்டமாக இது இருக்கும்.
இந்தியாவில் தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றும் ஒற்றை நோக்கில் செயல்பட்டு வருகிறோம். படிப்பு ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படுங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். புத்தகத்தில் உலகை படிப்போம்,
உலகையே புத்தகமாக படிப்போம்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.