சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வர நடவடிக்கை- சேகர்பாபு

3 Min Read
சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள், என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக முறைகேடு குறித்து கடந்த ஆண்டு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து விசாரணை நடத்துவதற்காகத் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒரு குழு அமைத்திருந்தது. அந்த குழு சிதம்பரம் கோயிலுக்கு விசாரணைக்கு வந்தபோது தீட்சிதர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக் குழுவின் முன்பு கோயில் நலனில் அக்கறை கொண்ட பக்தர்கள் புகார் மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன.

பக்தர்கள் கொண்டுவரும் காணிக்கைகளுக்கு கோயிலில் ரசீது வழங்கப்படுவதில்லை. பத்தாயிரம் கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என ரசீது இல்லாமல் வசூலிக்கின்றனர். நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவர் அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் பிற கோயில்களில் உள்ளதைப் போன்று உண்டியல் நிறுவவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தரமான பிரசாத கடைகளைக் கோயிலுக்குள் அமைக்க வேண்டும்.

அனைத்து விதமான பூஜை, அர்ச்சனைகளுக்கு ரசீது வழங்க வேண்டும். பெண்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுகிறார்கள். ஆயிரம் கால் மண்டபம் நட்சத்திர விடுதி போல பயன்படுத்தப்படுகிறது. சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 25 வகையான புகார்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இதனிடையே நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருச்சிற்றம்பல மேடை என்று கூறப்படும் கனகசபை மீது ஏறி நின்று சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்த தீட்சிதர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய பிறகும் யாரையும் அனுமதிக்கவில்லை.என்ற குற்றச்சாட்டும் உள்ளது,

திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தயை சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜெமினி ராதா என்பவர் நீதிமன்றத்தை அணுகியதன் அடிப்படையில், திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

ஆனால் அரசாணை வெளியிட்ட பிறகும் தங்களைத் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறைக்குப் புகார் அளித்தனர் பக்தர்கள்.

இந்த நிலையில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பக்தர்கள் கூட்டம் சிதம்பரத்தில் அதிகரித்து வருகிறது. நடராஜர் சந்நதியில் உள்ள கனக சபையில், பொது எனும் மேடையில் மக்கள் ஜூன் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வழிபடத் தடை விதித்து பலகை ஒன்றை வைத்தனர். அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிதம்பரம் கோயிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர் என்றும் விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள்; ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply