சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெருப்பு மேடு, செட்டி தெரு, கோதாமேடு பஜார் தெரு, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், கங்கையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று களப்பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி; சென்னையில் பொதுவாகவே 5 சென்டிமீட்டர் மற்றும் 6 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்கும். முதல்வர் அடுத்த துரித நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான மழை நீர் தேக்கம் எங்கும் இல்லை. ஓரிடங்களில் சுமார் 25 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்திருப்பதால் அரை மணி நேரம் மற்றும் ஒரு மணி நேரத்தில் மழை நீர் வடிந்துவிட்டது. எப்போதும் மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளான திருவள்ளுவர் தோட்டம், சுப்பிரமணிய சாலை, ஜெயராம் தெரு, கொத்தவால் சாவடி தெரு போன்ற பகுதிகளில் காலையிலிருந்து ஆய்வு செய்தோம். அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்துவிட்டது.

இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். முன்பெல்லாம் மழை வந்தாலே பயப்படும் நிலை மாறி மழை வந்தால் மகிழ்ச்சி அடையும் நிலை பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. எனவே செம்மரம் பக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் மழை நீர் எந்தவித தடங்கல் இன்றி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஆற்றின் அகலம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடி நீர் திறந்தாலும் பாதிப்பு ஏற்படாத நிலை உள்ளது. கடல் பகுதிகளில் உள்ள முகத்துவாரம் பெரிய அளவில் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் மழை நீரும் தடையின்றி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள், மேயர், துணை மேயர், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுரங்கப் பாதைகளில் உள்ள மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து தடை இன்றி செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.