சென்னை ஐக்கோர்ட்டு தீர்ப்பு : சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி : தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..!

4 Min Read

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ள சென்னை ஐகோர்ட்டு தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலத்திலும் அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக தான் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் அதிரடி தீர்ப்பை நீதிபதி நேற்று காலையில் பிறப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது; லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது சிறப்பு கோர்ட்டு மேலோட்டமாக இந்த வழக்கை விசாரித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image
அமைச்சர் பொன்முடி

அதுவும் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரது வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டும் 2 பேர் வருமானத்தை ஒன்றாக சேர்த்தும் விசாரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. சிறப்பு கோர்ட்டின் இந்த முடிவு அடிப்படையிலேயே தவறாகும். பொது ஊழியரான அமைச்சர் பொன்முடியின் மனைவி தெரியாத கணக்கில் காட்டப்படாத வகையில் கணவருக்கு வந்த வருமானத்தில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இந்த சொத்துக்கள் எல்லாம் அவரது வருமானத்தில் வாங்கியதாக ஒரு வேளை முடிவு செய்திருக்கலாம். அதேநேரம் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அவர் பெயரில் வாங்கிய சொத்துக்கள் எல்லாம் அவருக்கு ஏற்கனவே உள்ள மூலதன வருமானம் மூலம் வாங்கப்பட்டதா? என்பதை சிறப்பு கோர்ட்டு முதலில் கண்டறிந்து இருக்க வேண்டும். அதை செய்யாமல் விசாலாட்சியின் பெயரில் இந்த ஐந்து ஆண்டுகளில் அவரது வருமானத்தைக் கொண்டு இவ்வளவு சொத்துக்கள் வாங்க முடியாது என்ற போலீசாரின் ஆதாரங்களையும் ஏற்காமல் சிறப்பு கோர்ட்டு அதைப்புறம் தள்ளியுள்ளது. விசாலாட்சி பெயரில் உள்ள பெரும்பாலான சொத்துக்கள் பொன்முடிதான் இவர் பெயரில் வாங்கி உள்ளார். என்பதற்கு ஏராளமான சந்தேகம் உள்ளது. இவ்வாறு நம்பத் தகுந்த காரணங்களை எல்லாம் ஏற்காமல் சிறப்பு கோர்ட்டு வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த வருமான கணக்கை ஏற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளது. இவற்றை பார்க்கும் போது சுதந்திரமான ஆதாரங்களை ஆய்வு செய்யாமல் இதுபோல சிறப்பு கோர்ட்டு எடுத்துள்ள முடிவு அப்பட்டமான தவறு மற்றும் வெளிப்படையான பிழையாகும்.

இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு சிறப்பு கோர்ட்டு வழக்கில் சுதந்திரமான ஆதாரங்களை தேடி இருக்க வேண்டும். அதாவது குற்றச்சாட்டப்பட்டவர்கள் விவசாயத்தின் மூலம் 55 லட்சத்து 30 ஆயிரத்து 488 ரூபாய் கிடைத்தது என்று கற்பனையாக சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டது. ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் சுமார் 13 லட்சத்து 892 ரூபாய் தான் வருமானமாக கிடைத்திருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதை ஏற்கவில்லை. அதனால் வருமான வரித்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டப்பட்டவர்கள் வருமான கணக்கு விவரங்களை சிறப்பு கோர்ட்டு ஏற்றுக்கொண்டது தவறான முன்னுதாரணமாகும். பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த சுதந்திரமான ஆதாரங்களை பரிசிலிக்கவில்லை. போலீசார் தாக்கல் செய்த வங்கி கணக்குகளில் ஆவணங்கள் மீதும், சிறப்பு கோர்ட்டு நீதிபதி தவறான விளக்கங்களை அளித்துள்ளார். எனவே இவர்கள் இருவரையும் விடுதலை செய்த சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். 2006 ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய்க்கு அதாவது வருமானத்தை விட அதிகமாக 64.90% சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகி உள்ளது. அவர்கள் மீது போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களை குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன்.

அமைச்சர் பொன்முடி

இந்த வழக்கில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து, அவர்களது கருத்தை கேட்பதற்காக இருவரும் நாளை வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது இடையூறு இருந்தால் காணொளி காட்சி வாயிலாகவும், ஆஜராகலாம் இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ஏ. சிராஜுதீன் கூறியதாவது; ஊழல் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை இல்லாமல் அபராதம் மட்டும் விதித்தாலும் கூட தகுதி இழப்பு வரும் அதாவது சிறை தண்டனை பெற்றால் அந்த சிறை தண்டனையை அனுபவித்து விடுதலையான நாளில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அபராதம் மட்டும் என்றால் குற்றம் செய்தவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது. தற்போது அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மேல் செல்லப்பட்ட அனைத்து அம்சங்களும் அவருக்கு பொருந்தும். பொன்முடிக்கு எதிரான வழக்கு 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு குறைந்தது ஓராண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Share This Article

Leave a Reply