சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில்,”ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும்,தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ தரைப்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் இலக்கு வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தியா மேற்கொண்டுள்ள சந்திரயான் 3 திட்டத்தின் விண்வெளிப்பயணம் அதன் இலக்கை அடைவதுடன் நிலவு குறித்த சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியில் இந்தியா முதன்மை பெறவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும்” எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நிலவை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தில் நிலவில் இறங்கி சாதனை படைக்க வாழ்த்துகள். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது. இந்த சாதனைக்கு காரணமான இஸ்ரோ அறிவியலாளர்கள், பிற பணியாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக, சந்திரயான் 3 திட்ட இயக்குனரான எங்கள் மாவட்டத்து மைந்தர் வீரமுத்துவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.