நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத்தினர் , பொதுமக்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 14 அப்பாவி தினக்கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் . இந்த சம்பவம் தொடர்பாக 30 ராணுவ வீரர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது .

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் , ஒடிங் என்ற கிராமத்தில் நாகாலாந்தின் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங் ஆங் கிளர்ச்சியாளர்கள் சிலர் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, டிரு – ஒடிங் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாதுகாப்புப் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னரே வாகனத்தில் இருந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் டிரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 2 பேருக்கு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மூன்று வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 30 ராணுவ வீரர்கள் மீது மோன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு பதியப்பட்டது. அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டப்படி, பணியில் இருக்கும்போது ராணுவம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக வழக்கு தொடர வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.
அதன்படி இந்த வீரர்களுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அந்த ராணுவத்தினர் மீது வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் ஐ.ஜி. ரூபா தெரிவித்து உள்ளார்.
இது பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.