- புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு நியமித்த குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகா என்பவர் தாக்கல் செய்த வழக்கில், தன்னுடைய சொந்த வார்டில் பொதுமக்களின் குறைகளை கேட்ட சென்ற போது அங்கு ஏராளமான தொழிற்சாலைகள், கட்டிடங்கள் எந்த வித அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு, பின் அந்த புகாரானது பஞ்சாயத்து துறையின் உதவி இயக்குனர், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் விளங்காடுப்பாக்கம், சென்றாம்பாக்கம் கிராம பஞ்சாயத்துகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன் எந்த வித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கிராமங்களில் உள்ள அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு தரப்பில், 2023 அரசாணையின் படி அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் புகார் அளித்த பின் தான் வழக்கு தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், அந்த குழுவிடம் புகார் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
மனுதாரர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு நியமித்த குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கினை தள்ளி வைத்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.