கோவை மாநகர காவல்துறை ஒவ்வொரு மதத்தினருக்கும் ஏற்றபடி நடந்து கொள்வதாக காவல்துறையை விமர்சித்து யூடியூபில் வீடியோ வெளியிட்ட விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவர் ஜலேந்திரன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் விவேகானந்தர் பேரவை அமைப்பின் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் ஜலேந்திரன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்போது ஜலேந்திரன் வெளியிட்ட வீடியோவில்,

கோவை மாநகரில் இருசக்கர வாகனங்கள் மூலமாக நடந்த சம்பவங்களால் கலவரம் ஏற்பட்ட வரலாறு இருக்கிறது. இந்துக்களுக்கு ஒரு மாதிரியாகவும், மாற்று மதத்தினருக்கு ஒரு மாதிரியாகவும் நடைமுறைகளை காவல்துறை கடைபிடிக்கிறது.
இது குறித்து பேசுவதற்காக காவல் ஆணையரை சந்திக்க முயன்ற பொழுது அவர் சந்திக்கவில்லை. தாடி வைத்து குல்லா போட்டு வாகனங்களில் வருபவர்களிடம் ஒரு மாதிரியாகவும், சாதாரண இந்துக்களுக்கு ஒரு மாதிரியாகவும் காவல்துறை செயல்படுகின்றது.

கோவை குண்டு வெடிப்பு கைதியாக இருந்தவர்களுக்கு மாநகராட்சி கடை ஒதுக்க முடிவு செய்துள்ளது. போக்குவரத்தை காரணம் காட்டி கடைகள் அகற்றப்பட்டவர்களுக்கு கடைகள் வழங்குவதில்லை.
இவற்றை சரி செய்யவில்லை என்றால் ஆரோக்கியமாக இருக்காது என பேசி இருந்தார். இந்த நிலையில் யூடியூப் வீடியோ காட்சி அடிப்படையில் பெரிய கடைவீதி காவல் நிலைய போலீசார் விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவர் ஜலேந்திரன் மீது கலகம் செய்ய தூண்டுதல்,

இரு வெவ்வேறு சமூகங்களுடைய வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.