இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். 1988-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறது. ரூ. 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் இந்நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி (61) உள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஆராய்ச்சியில் புகழ் பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி., எனும் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும்,

இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை வைத்தது. இந்த செய்தி வெளியானவுடன் அதானி நிறுவன பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. உலகின் 3-வது பெரும் பணக்காரர் எனும் நிலையில் இருந்த கவுதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் இந்நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்தது. 2023 பிப்ரவரி மாதம், இந்திய பங்கு சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) இது குறித்து ஒரு விசாரணையை தொடங்கியது.

அதன்படி 2023 மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான உண்மையை கண்டறிய ஒரு ஆறு பேர் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கியது. 2023 ஏப்ரல் மாதம் செபி 6-மாத கால அவகாசம் கோரி விண்ணப்பித்தது. 2023 மே மாதம் இந்த கமிட்டி தனது முடிவை அறிவிக்க செபியின் முழு அறிக்கையை எதிர்பார்ப்பதாக அறிவித்தது. அப்போது உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் வரை செபிக்கு அவகாசம் அளித்தது.

அதானி குழுமத்துடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள 12 முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை ஐந்து வெளிநாட்டு வருமான வரி புகலிடங்களில் இருந்து பெற தாமதமாவதாக கூறி செபி மேலும் அவகாசம் கேட்டது. நேற்று தனது நிலை அறிக்கையை செபி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த அதானி-ஹிண்டன்பர்க் வழக்கை உச்ச நீதிமன்றம் வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்யும் முக்கிய நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்று என்பதால், இந்த வழக்கின் விசாரணையையும், தீர்ப்பையும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.