நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் நாள் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து நாட்கள் முன்பாக கடந்த 4 ஆம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது.
மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இம்முறை 67 பேர், அதிலும் ஒரு கேள்விக்குத் தவறான விடையளித்து மைனஸ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்திருப்பது வியப்பையும், நீட் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையளித்தால் ஒரு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.
அதனால், முதலிடம் பிடித்தவர்கள் 720 மதிப்பெண் பெற்றால், அதற்கு அடுத்த நிலையில் வருபவர்கள், ஒரு வினாவுக்கு விடையளிக்காமல் இருந்திருந்தால் 716 மதிப்பெண்களும், தவறான விடையளித்திருந்தால் 715 மதிப்பெண்களும் மட்டும் தான் பெற முடியும்.

ஆனால், இம்முறை முழு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் 719, 718, 717 என மதிப்பெண்களை எடுத்துள்ளனர். இந்த மதிப்பெண்களை எடுக்க சாத்தியமே இல்லை என்பதால், விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.
மாணவர்களின் ஐயத்திற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் ஐயத்தை போக்குவதற்கு மாறாக, ஐயத்தை அதிகரித்திருக்கிறது. அதேபோல், ஒரு வினாவுக்கு இரு சரியான விடைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும்,
அந்த இரு விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்வு முகமை கூறியுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. தேர்வுகளை நடத்துவதில் ஏதேனும் குளறுபடிகள் நடந்து,

அதற்காகக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக இருந்தால், எதற்காகக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன? எந்த அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன?
யாருக்கெல்லாம் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்? என்பது குறித்த பொது அறிவிப்பை தேர்வு முகமை வெளியிட வேண்டும். அது தொடர்பான மாணவர்களின் கருத்துகளை அறிந்த பிறகு தான் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாத தேர்வு முகமை தன்னிச்சையாகக் கருணை மதிப்பெண்களை வழங்கியிருக்கிறது. நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டது உண்மை தான்.

ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. தேர்வு முகமைக்கு மனு அனுப்பியவர்களுக்கும், நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது நியாயமும் அல்ல, சமூகநீதியும் அல்ல.
தேர்வு முகமை பின்பற்றிய இந்த பிழையான நடைமுறையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால்,

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண் 50 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 570க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் தரப்பில் கூறப்படும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்காக அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. 2024 ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும், சில மையங்களில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள் மருத்துவப் படிப்பில் சேர நினைத்திருந்த மாணவர்களின் நம்பிக்கையை குலைத்திருக்கின்றன.
அந்த மாணவர்களின் ஐயங்கள் அனைத்தையும் மத்திய அரசு போக்க வேண்டும். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை.
இந்த அநீதியை போக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.