ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க பவன் கல்யாண் அக்கா மகனும் டோலிவுட் ஹீரோவுமான சாய் தரம் தேஜ் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சாய்தரம் தேஜ் நேற்று முன்தினம் பித்தாபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாட்டிலை எடுத்து சாய் தரம் தேஜை நோக்கி வீசினார். அதிர்ஷ்டவசமாக பாட்டில் சாய் தரம் தேஜ் மீது விழாமல் அருகில் இருந்த ஸ்ரீதர் என்பவர் தலை மீது விழுந்தது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

கட்சித் தொண்டர்கள் ஸ்ரீதரை மீட்டு பிதாபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் மீது பாட்டில் வீச்சு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.