போக்குவரத்து தொழிலாளர்கள் 8 ஆண்டுக்கால கோரிக்கைகளை முன்வைத்து நாளை மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, இன்று இரவு முதல் தென் மாவட்டங்களில் பேருந்து இயக்கம் பாதியாக குறைந்திருக்கிறது. இதனால் பயணிகள் சென்னை திரும்புவதில் சிக்கல் எழுந்திருக்கிறது. வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை. இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் போக்குவரத்து கழகங்களுடன் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்கங்களுடன் இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று நடைப்பெற்ற பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை சென்னை திருவான்மியூர் பேருந்து பணிமனை பெயர்ப்பலகையில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை வேலை நிறுத்தம் தொடங்குவதையொட்டி இப்போதில் இருந்தே படிப்படியாக பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இப்போதில் இருந்தே படிப்படியாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், பல ஊர்களில் பொதுமக்களின் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்திற்கு வந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் டிப்போவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள், இலக்கை சென்றடைந்தவுடன் நிறுத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், பலரும் சொந்த ஊருக்கு சென்று, உறவினர்களுடன் பொங்கல் கொண்டாட பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த திடீர் போராட்டம் அவர்களை கலக்கமடைய செய்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி 12ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளை பேருந்துகள் வழக்கம் போல் ஓடும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் கோட்டம் உள்ளடக்கிய விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களின் சார்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 09/01/2024 அன்று ஒரு சில தொழிற்சங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதை அடுத்து அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளையும் பணிமனைகளில் முறையாக பராமரிப்பு செய்திடவும் தடையின்றி இயக்குவதற்கும் அனைத்து பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாக பாதுகாப்பான பேருந்து இயக்கம் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.