திருவனந்தபுரத்தில் சொந்த மகள் என்றும் பாராமல் 6 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 44 வயதான ஒருவருக்கு 15 மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது மனைவி துபாயில் பணிபுரிந்து வருகிறார். இதனால் மகள்கள் தந்தையுடனும், அதே பகுதியில் இருக்கும் தங்கள் பாட்டியின் வீட்டிலும் மாறி மாறி தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வருடம் தன்னுடைய அடிவயிற்றில் வலிப்பதாக 6 வயது சிறுமி தன்னுடைய பாட்டியிடம் கூறியுள்ளார். இதை அடுத்து அந்த சிறுமியை பாட்டி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
டாக்டர் பரிசோதித்த போது அந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், உடலில் பல்வேறு பகுதிகளிலும் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்த போது தான் தன்னை தந்தை பலமுறை பலாத்காரம் செய்த விவரத்தை அந்த சிறுமி கூறி கதறி அழுதார்.

இது குறித்து அந்த டாக்டர் திருவனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிகளின் தந்தைக்கு எதிராக போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தந்தைக்கு 3 ஆயுள் தண்டனையும், பல்வேறு பிரிவுகளில் 21 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

ஆயுள் தண்டனை ஏக காலத்திலும், 21 வருட சிறை தண்டனையை தனியாகவும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில்;- பெற்ற மகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இதுபோன்ற மோசமான நபரை சட்டத்தின் இரும்பு சங்கிலியால் கட்டிப்போட வேண்டும். தந்தை என்ற நம்பிக்கைக்கு இவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.