கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய குழந்தை தனியே கதறும் காட்சி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் இறந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிலரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 127 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த விவகாரத்தில் சிகிச்சை பலனின்றி 37 பேர் இறந்துவிட்டனர்.
இன்னும் தொடர்ந்து பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சாராய வியாபாரி கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கள்ளசாராயம் குடித்து பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் ஒவ்வொருவராக இறந்து வருவதாலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை,
சேலம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அழுது கொண்டு இருக்கும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள், பெண்கள், திருநங்கை ஒருவர் என இறந்ததாக சொல்லப்படும் நிலையில்,

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்த சோகம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்த சுரேஷ் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி வடிவும் உயிரிழந்துவிட்டார்.
இவர்களது 10 வயது சிறுமி அப்பா, அம்மாவின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாறி மாறி போய் அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. அந்த குழந்தை யாரும் இன்றி ஆதரவற்ற நிலையில் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.