விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மரக்காணம் அருகே உலா மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து சங்கர், சுரேஷ், தரணிவேல் உட்பட 4 பேர் வாந்தி, மயக்கமுற்று பரிதாபமாக உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரத்யேக சிறப்பு சிகிச்சைக்காக தனி அறை ஏற்பாடு செய்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாநிலத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கலையும், அரசுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘ மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச் சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.
உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்த துயர சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.