பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக வேட்பாளார் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்தில் உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் கவனிப்புக்குள்ளான தொகுதியாக கோவை மக்களவைத் தொகுதி உள்ளது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதே இந்த கவனிப்புக்கு காரணமாகும்.

அண்ணாமலையை வென்றே தீருவது என்ற முடிவுடன் களமிறங்கிய திமுக, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக களமிறக்கியது. அதிமுக சார்பில் ஐ.டி. விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிட்டார்.

அவர் மொத்தம் 5,71,150 வாக்குகளை பெற்றதுடன், 1.75 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அவருக்கு அடுத்ததாக, அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 (31.47%) வாக்குகளை பெற்றார்.
தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 1,45,104 வாக்குகளை அள்ளினார். இந்த நிலையில், கோவையில் திமுக வேட்பாளார் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.