கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (46), தொழிலாளி. இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதை அடுத்து மனைவியும் ஒரு மகளும் தனியாக சென்று விட்டனர். சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆர்த்தி (21) வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் நேற்று சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மதுபோதையில் தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி கூறினார்.
இதை அடுத்து சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுரேஷ்குமாரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு தலையில் காயங்கள் இருப்பதாக கூறினார்கள்.
இதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவரது மகள் ஆர்த்தியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தந்தையை கொலை செய்ததை ஆர்த்தி ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-
எனது தந்தை தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்ததால் எனது தாயார் மற்றும் சகோதரி தனியாக சென்று விட்டனர். நான் தந்தையுடன் வசித்து வந்தேன். குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார். சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் குடிபோதையில் வந்து என்னை தாக்க முயன்றார்.

அப்போது நான் என்னை பாதுகாத்துக்கொள்ள அவரை தாக்கினேன். அப்போது அவர் சுவரில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தையின் கழுத்தை பிடித்து நெரித்தேன். அப்போது அவர் மயங்கி விழுந்து விட்டார்.
ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். மதுபோதையில் தந்தை விழுந்து விட்டதாக கூறினேன். ஆனால் பிரேத பரிசோதனையில் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதை அடுத்து போலீசார் ஆர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தையை மகள் கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.