என் இனிய தமிழ் மக்களே என்கிற அந்த அழுத்தமான குரல் மீண்டும் ஒழிக்கப் போகிறது என்று ரசிகர்கள் பலர் பாரதிராஜாவை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து தனது புதிய படத்திற்குப் பூஜை செய்து படப்பிடிப்பை துவங்கினார்.

படத்திற்குத் தாய்மெய் எனப் பெயரிடப்பட்டுள்ள சூழலில், மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், பவதாரணி இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ‘நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்க உள்ளேன். 6 ஆண்டுகளில் என்னை நடிக்க அழைத்தார்கள்.
கடந்த 1964-ல் ஒரு நடிகனாக வேண்டும் எனத் திரை உலகத்திற்கு வந்தேன். அந்த வாய்ப்பு 84 வயதில் தான் கிடைத்தது. சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறேன். என்னதான் இருந்தாலும் இயக்குவதில் இருக்கும் சக்தியும் பலமும் வேறு, நடிப்பது வேறு. நீண்ட காலம் இயக்காமல் இருந்தது ஒரு ஏக்கத்தைத் தந்தது. அதனால் இப்படி ஒரு படத்தை ஆரம்பித்துள்ளேன்.

தாய்மெய் எனப் பெயரிட்டுள்ளேன். தாய் உண்மையானவள் என்ற தலைப்பு. ஒரு தாய் எப்படிப்பட்டவள் என்பதைச் சொல்லியுள்ளேன். என் மண் கருமாத்தூரில் என் மண் சார்ந்த, என் மக்கள் சார்ந்த ஒரு படைப்பு, எனது குலதெய்வ கோவிலில் பூஜை செய்து துவங்கியுள்ளேன்.
25 நாட்களில் படம் முடியும். முக்கியக் கதாபாத்திரத்தில் நானும் நடிக்கிறேன். என்னையும், நாயகியாக அறிமுகம் ஆகும் மஹானா என்பவரையும் மூன்று காலக் கட்டத்தில் வாழ்வதைப் போலக் காணலாம். இதுவரை உள்ள பாரதிராஜா போன்று இல்லாமல் வேறு ஒரு பாரதிராஜாவை பார்க்கலாம்’ எனப் பேசினார். பாரதிராஜா இயக்கும் படம் என்பதால் மக்கள் மிக நீண்ட எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.