கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிவது இன்று வனத்துறையினரால் கண்டறியப்பட்டது.
இதன் காயத்திற்கு சட்டவிரோதமாக காட்டு பன்றியை வேட்டையாடி கொல்ல பயன்படுத்தப்படும் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு காரணமாக இருக்கலாம் என வன உயிரின ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்து , இக்கோணத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இரு யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாகவும் பாகுபலியின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் , பாகுபலி இருந்த இடத்தில் யானைகள் மோதல் ஏற்பட்டதற்கான தடையம் காணப்பட்டதாகவும், வனத்துறையினர் கூறி வருகின்றனர்.

பாகுபலி யானை தற்போது ஒரு இடத்தில் நில்லாமல் வனப்பகுதிக்குள் வேகமாக நகர்ந்து வனத்துறையினருக்கு வழக்கம் போல் போக்கு காட்டி வருவதால் அதன் காயத்தின் தன்மையை ஆய்வு செய்ய இயலவில்லை. இந்நிலையில், அவுட்டுக்காய் காரணமாக பாகுபலி காயமடைந்ததாக உறுதி படுத்தப்பட்டால் சந்தேகப்படும் வனப்பகுதியில் நாட்டு வெடிகளை கண்டறிய வனத்துறைக்கு சொந்தமான இரு மோப்ப நாய்கள் சாடிவயல் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
பைரவன், வளவன் என அழைக்கப்படும் இந்த பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் பாகுபலி காயம்பட்டது அவுட்டுக்காய் என உறுதி செய்யப்பட்டால் வனத்திற்குள் சென்று வேறு எங்கேனும் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகள் உள்ளனவா என கண்டறியப்பட உள்ளது.
யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் சுகுமார் வந்துள்ள நிலையில் யானைக்கு காயம் சிறிதாக இருந்தால் பலா அன்னாசி வாழை போன்ற பழங்களில் மருந்துகள் வைத்து யானைக்கு கொடுக்கப்படும் என்றும் காயம் பெரிதாக இருந்தால் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் பாகுபலி இருக்குமிடத்தையும் அதன் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய டிரோன் கேமராவை பயன்படுத்தவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.