கோவை ஈசா யோகா மையத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மின் மயான தகனமேடையை பார்வையிட சென்ற முற்போக்கு அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக ஈஷா அமைப்பின் உறுப்பினர்கள் மீது ஆலாந்துறை காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் ஈஷா மின்தகன மேடை அமைத்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பழங்குடி மக்களுக்கு தானமாக வழங்கிய இடத்தில் மின் மயானம் அமைக்கப்பட்டு வருவதாகவும்,
மின் தகன மேடை அமைக்கும் விவகாரத்தில் உண்மை நிலவரம் குறித்து அறிய முற்போக்கு அமைப்புகள் சார்பில் உண்மை கண்டறியும் குழு கடந்த 14 ஆம் தேதி அந்த பகுதியை பார்வையிட சென்றனர்.

அப்பொழுது அவர்களை ஈஷா யோகா மையத்தின் ஆதரவாளர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த பகுதியை பார்வையிட முற்போக்கு அமைப்பினர் செல்லக்கூடாது என தடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.
முற்போக்கு அமைப்பினர் சென்ற வாகனத்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஈஷா யோகா மையத்தின் தலைமை அதிகாரி தினேஷ் ராஜா,

வெங்கட் ராஜா, நந்தகோபால் மற்றும் முள்ளங்காடு சசிகலா உள்ளிட்ட பலர் மீது எழுத்து பூர்வமாக புகார் அளித்தார். இந்த நிலையில் இது தொடர்பாக கு.ராமகிருஷ்ணனின் புகாரின் பேரில் கோவை ஆலந்துறை போலீசார் பெயர்கள் எதுவும் குறிப்பிடாமல்,

ஈஷா யோகா மைய ஆட்கள் என குறிப்பிட்டு அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். முறையற்ற தடுப்பு, கொலை மிரட்டல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ்,

ஈஷா யோகா மைய ஆட்கள் மீது வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.