மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக முன் விரோதம், பழிவாங்கல், அரசியல் கொலைகளால் காவல்துறையினரையே திணற வைத்துள்ளது.
இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது எனவும், குறிப்பாக கொலை,கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, போதையால் கொள்ளை, கொலையில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த தினங்களில் நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படுகொலை சம்பவங்கள் தமிழக காவல்துறையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. மேலும் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டனர்.

நகைகளுக்காக வயதான மூதாட்டிகளை குறி வைத்து கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 8 ஆம் தேதி வாகைகுளத்தைச் சேர்ந்த காசம்மாள் என்ற எழுபது வயது மூதாட்டியும்,
ஜூலை 11 ஆம் தேதி மதுரை மேலூர் அருகே பாப்பு என்ற மூதாட்டியும், விருகனூ பகுதியில் 56 வயதுடைய ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டனர். இதேபோல் கடந்த 12 ஆம் தேதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மதுரையில் அமைச்சரின் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். மேலும் மதுரை வடக்கு தொகுதி துணை செயலாளராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டு அருகே வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை சூழ்ந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார். அதிகாலையில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து அங்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் பாலசுப்ரமணியனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலசுப்பிரமணியன் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றிருப்பது மதுரை நகரை கொலை நகராக மாற்றி இருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.