பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து, தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத்தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்;- “தற்போது 8 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.
கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
தனிப்படை போலீசார் அருள் (33), செல்வராஜ் (48), மணிவண்ணன் (25), திருமலா (45), பொன்னை பாலு (39), ராமு (38), சந்தோஷ் (32), திருவேங்கடம் (33), ஆகிய 8 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஏற்கெனவே கடந்தாண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை தனிப்படை போலீசார் முடிக்கி விட்டுள்ளனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடம் அதை சுற்றிப் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்தும், மீதமுள்ள தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர்களையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங் வீடு உள்பட சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.