வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.

2 Min Read
  • திருவள்ளுவர், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ் மாதம் தை 2 ம் தேதி திருவள்ளுவர் தினமாக, விடுமுறை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை செல்லாது என அறிவித்து, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்க உத்தரவிடக் கோரி
திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், கடந்த 1935 ம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாகவும், 600 ஆண்டுகள் முன் மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோவிலில், வைகாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தை 2ம் தேதி திருவள்ளுவரை போற்றும் வகையில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கவில்லை எனவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் பிறந்தநாள் எது என அறுதியிட்டு கூற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை அவரது பிறந்தநாளாக அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அந்த உத்தரவில், மனித குலத்துக்கு 1,330 குறள்களில் வாழ்வியல் முறையை வகுத்தளித்த திருவள்ளுவரின் பிறந்தநாளை கண்டுபிடிக்க நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியதாகவும், ஆனால் அவரது பிறந்தநாள் குறித்த தீர்க்கமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தை மாதம் 2ம் தேதியை திருவள்ளுவர் தினமாக அறிவித்த உத்தரவில் எந்த இடத்திலும், அது அவரது பிறந்தநாள் என குறிப்பிடவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் சார்ந்துள்ள அமைப்பு வைகாசி மாதம் அனுச நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share This Article

Leave a Reply